வாழ்த்துரை பேரா. அரங்கமல்லிகா படைத்துள்ள மணிமேகலையின் பௌத்தப் பேரறம் என்ற இந்நூல் பல்லுயிர் ஓம்பும் பௌத்தம், மணிமேகலையின் அறிவாளுமை, மணிமேகலையின் பௌத்தப் பேரறம், நவீனத்துவமும் பௌத்தப்பேரறமும், அமுதசுரபி–அன்பு-கருணை, பௌத்தமும் பாதவழிபாடும், புத்தக்காஞ்சியும் போதி அறமும், சீலமும் தானமும், ஆன்மாவும் மறுபிறப்பும், பௌத்தம் காட்டும் ஈஸ்வரம், பௌத்தத்தில் பெண் தொன்மம், இறைகாக்கும் இந்திரவிழா என்னும் 12 கட்டுரைகளைக் கொண்டுள்ளது. மணிமேகலை என்றாலும் பௌத்தம் என்றாலும் அறம் என்ற சொல் இயல்பாக நினைவிற்கு வந்துவிடும். அவ்வாறான பிணைப்பைக் கொண்ட பேரறத்தைப் பற்றி இலக்கியம், வெளிநாட்டவர் குறிப்புகள், அறிஞர்களின் நூல்கள் போன்ற சான்றுகளைக் கொண்டு உரிய மேற்கோள்களுடன் பன்னோக்கில் விவாதித்துள்ள ஆசிரியர் மணிமேகலைக் காப்பியத்தின் சிறப்பையும், பௌத்தத்தின் சிறப்பையும் நுணுக்கமாக அணுகியுள்ளார். இந்நூலிலிருந்து சில பகுதிகளைக் காண்போம். “அறத்தையே மனித மனமானது நாடி அடையவேண்டும். அதற்கு அடங்கா மனமானது அடங்கும் வகையில் மனிதர்களாகிய நாம் அன்பு, இரக்கம், கருணை ஆகிய நல்ல பண்பாட்டுத் தளத்தில் செலுத்தி இயங்குவோமேயானால், ம...